Showing posts with label TAMIL. Show all posts
Showing posts with label TAMIL. Show all posts

Sunday, April 23, 2017

மே முதலாம் தேதி . தலைநகரில் மாபெறும் பேரணி!

Johari Seman     9:59:00 AM    
கோலாலம்பூர், ஏப்ரல் 22 : வரும் மே முதலாம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பி,எஸ்.எம். கட்சி ஏற்பாடு செய்யும் மாபெரும் பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் கூறினார்.

நாங்கள் அப்பேரணிக்கு அனுமதி வாங்கவில்லை என்பதால், அன்றைய தினம் அப்பேரணியை நடத்த முடியாது என்று போலீசார் கூறியிருந்தாலும் அது திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் அவர் சொன்னார்.

இப்பேரணிக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. காரணம் நாங்கள் அனைவரும் பொதுமக்கள் கூடும் இடங்களில்தான் கூடி நிற்கப் போகிறோம் என்றார்.

இதற்காக போலீஸ் அனுமதி பெற வேண்டியதில்லை. காரணம் அன்றைய தினம் புக்கிட் பிந்தாங்கின் லாட் 10 பகுதியிலுள்ள வர்த்தகர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் சொன்னார்.

கடந்த 1994ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற தொழிலாளர் பேரணி நடத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் இதுபோன்ற பேரணிகள் நடத்தப்படுவது வழக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 23 ஆண்டுகளாக ஆண்டுத்தோறும் இப்பேரணியை நடத்தி வந்துள்ளோம். இறுதியாக நாங்கள் மாஜூ முச்சத்தியிலிருந்து மேடான் பசாரை நோக்கி செல்வோம். இதற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை என்றார்.

2012ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டத்தின் விதிமுறைகளை ஏற்பாட்டுக் குழுவினர் ஒருபோதும் மீறவில்லை. காரணம் இப்பேரணி தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்னதாகவே போலீசாரிடம் தகவல் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் அவர் சொன்னார்.

இந்த அமைதி பேரணியை மலேசிய மனித உரிமை ஆணையமும், மலேசிய வழக்கறிஞர் மன்றமும் தொடர்ந்து கண்காணித்து வரும் எனவும் அவர் சொன்னார்.

ஏற்பாட்டுக்குழுவினர் இப்பேரணியை நடத்தக் கூடாது என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. முகமட் சுக்ரி கமான் கூறினார்.

தொழிலாளர்களுக்கு குறைந்தப்பட்ட சம்பளமாக 1,500 வெள்ளி சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பதோடு வேலை கொடுப்பதில் ஆண் – பெண் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதும் இப்பேரணியில் முன்வைக்கப்படும். –தி மலேசியன் டைம்ஸ்

விசித்திரமான சடங்குகளை செய்த மந்திரவாதி கைது!

Johari Seman     9:57:00 AM    
கோலாலம்பூர், ஏப்ரல் 22 : நாட்டில் மக்கள் எள்ளி நகையாடும் அளவிற்கு விசித்திரமான சடங்குகளை செய்து மந்திரவாதி மன்னன் என அழைக்கப்பட்டு வந்த இப்ராகிம் மாட் எனும் உண்மைப் பெயரைக் கொண்ட மந்திரவாதி நேற்று ஜோகூர், சிகாமாட்டில் கைது செய்யப்பட்டார்.

நேற்று பின்னிரவு 2.30 மணியளவில் சிகாமாட்டிலுள்ள ஒரு ஓட்டலில் அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் அண்மைக்காலமா பல விசித்திரமான சடங்குகளை செய்து வந்ததால் பலரின் சர்ச்கைக்குள்ளாகி வந்தார்.

ஆகக்கடைசியாக வட கொரியாவிற்கும் மலேசியாவிற்குமிடையே பதற்ற நிலை ஏற்பட்டபோது மலேசியாவை பாதுகாக்கும் வகையில் கடந்த 13.3.2017ஆம் தேதி தலைநகர், கோலாலம்பூர் மருத்துவமனையின் தேசிய தடவியல் கழகத்தின் முன்புறம் விசித்திரமான சடங்குகளை செய்தார்.

அவரின் அச்செயல்கள் இஸ்லாமிய சமய முறைக்கு எதிரானது என்பதால், அவரின் நடவடிக்கையில் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ ஒஸ்மான் முஸ்தாபா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மந்திரவாதியின் நடவடிக்கை இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவரின் செயலை கண்காணிக்குமாறு பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோ டாக்டர் அஷ்ய்ரா·ப் வஜிடி டுசுக்கி உத்தரவிட்டிருந்தார்.

காணாமல் போன எம்.எச். 370 விமானத்தை தேடுவதாக அவர் வினோதமான செயல்களைப் புரிந்ததும் இதில் அடங்கும். –தி மலேசியன் டைம்ஸ்

ஸாஹிர் நாயக்கை கைது செய்யுமாறு இந்தியா கேட்டுக் கொள்ளவில்லை- ஐ.ஜி.பி

Johari Seman     9:56:00 AM    
கோலாலம்பூர், ஏப்ரல் 22 : இந்நாட்டில் இருக்கும் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாஹிர் நாயக்கை கைது செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடமிருந்து மலேசியாவுக்கு இதுரை எந்தவித வேண்டுகோளும் வரவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் கூறினார்.

அவ்வாறு அவசியம் ஏதும் இந்தியாவிற்கு தேவைப்பட்டால் அது மலேசிய நாட்டின் தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் மூலம் மனு செய்ய வேண்டும் என்றார்.

இதுவரை இந்தியாவிற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. உதவிக் கேட்கும் இந்தியா அதனை முறையாக நாட்டின் சட்டத்துறை அலுவலகத்தின் மூலம் அதனை மேற்கொள்ள வேண்டும் என்று நேற்று வார்சாப் மூலம் தெரிவித்தார்.

ஸாஹிர் நாயக்கை கைது செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை ஏதும் வந்ததா என்று அவரிடம் கேட்டபோது டான்ஸ்ரீ காலிட் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று இந்தியாவிலுள்ள நீதிமன்றம் ஸாஹிர் நாயக்கை கைது செய்வதற்கு இரண்டாவது தடவையாக கைது ஆணை வெளியிட்டது.

இந்தியாவின் தேசிய விசாரணைப் பிரிவு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மும்பையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் அந்த கைது ஆணையை பிறப்பித்தது.

அண்மையில் ஸாஹி நாயக்கிற்கு எதிராக ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி.வேதமூர்த்தி, வழக்கறிஞர் சித்தி காசிம் உட்பட 19 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். –தி மலேசியன் டைம்ஸ்

Saturday, April 22, 2017

காச நோய் கண்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

Johari Seman     12:48:00 PM    
கோலாலம்பூர், ஏப்ரல் 21: இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் காசநோயை கண்டறிய சுகாதார அமைச்சு அதிக சாத்தியமுள்ள பகுதிகளிலிருந்து 350 ஆயிரம் மலேசியர்கள் மற்றும் அந்நிய நாட்டினர் மீது மருத்துவ சோதனையை மேற்கொண்டதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் 23 ஆயிரம் காசநோய் சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதாக அவர் சொன்னார். அவற்றில் 13 விழுக்காடு அந்நிய நாட்டவர்களை உட்படுத்திய சம்பவங்களாகும்

நாடு முழுவதும் சுகாதார அமைச்சு தனிநபர்களை உட்படுத்திய சுகாதார தொடர் பரிசோதனைகளை கட்டம் கட்டமாக மேற்கொள்ள இலக்கு கொண்டுள்ளது. அதிகரித்து வரும் காச நோய் சம்பவங்களைக் குறைக்க அந்த சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுப்ரா கூறினார்.

காச நோய் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு சுகாதார சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காச நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கும் முக்கிய நோக்கத்தில் தேசிய காச நோய் கட்டுப்பாட்டு வியூக திட்டத்தை சுகாதார அமைச்சு வகுத்து வருகிறது. 2016 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரையிலான இத்திட்டத்தின் வாயிலாக நாட்டில் காச நோயைக் கட்டுப்படுத்த முடியும் என சுப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நோயை அடையாளம் கண்டு தகுந்த சிகிச்சை அளிப்பது அது சார்ந்த முயற்சிகளில் அரசாங்க- அரசு சார்பற்ற அமைப்புக்கள், தனியார் மருத்துவ துறையினர் மற்றும் சமூகத்தின் பங்களிப்பு, காச நோயைத் தடுக்கும் முயற்சிகள் ஆகியவற்றை அத்திட்டம் உள்ளடக்கியிருக்கும் என அவர் சொன்னார்.

மேலும், காச நோயைக் கட்டுப்படுத்த விவேகமாக புதிய முயற்சிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கவும் சுகாதார அமைச்சு தேசிய காச நோய் கட்டுப்பாட்டு வியூக திட்டத்தை வரைவதாக சுப்ரா தெளிவுபடுத்தினார்.

நாட்டில் 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு காச நோயாளிகளின் எண்ணிக்கை ஆறு விழுக்காடு அதிகரித்தது. 2015-ஆம் ஆண்டில் 24-ஆயிரத்து 220-ஆக இருந்த காச நோயாளிகளின் எண்ணிக்கை கடந்தாண்டு 25-ஆயிரத்து 739-ஆக அதிகரித்தது. அதோடு, காச நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 விழுக்காடு அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

2015-ஆம் ஆண்டு ஆயிரத்து 696 பேர் உயிரிழந்த வேளையில் கடந்தாண்டு அந்த எண்ணிக்கை ஆயிரத்து 945-ஆக அதிகரித்தது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணையத்துள்ள இலக்கை அடைவதற்கு மலேசியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் கடந்தாண்டு முழுவதும் பதிவான காச நோய் சம்பவங்களில் 30 விழுக்காடு, அந்நிய நாட்டினரைச் சார்ந்தது என சுகாதாரத் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹில்மி யஹயா கூறியுள்ளார். மலேசியாவை வந்தடையும் அந்நிய நாட்டினரில் காச நோய் கண்டவர்கள் உடனடியாக அவர்களின் தாயகம் திரும்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழையும் காச நோய் கண்ட அயல்நாட்டினருக்கு, குணமடையும் வரையில் தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுவதாக அவர் சொன்னார். சபாவுக்கு அடுத்தபடியாக சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் அதிகமான காச நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், காச நோய்க்கான அறிகுறிகளை தொடக்க கட்டத்திலேயே அடையாளம் கண்டு அதனைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்துகிறது.–தி மலேசியன் டைம்ஸ்

சஞ்சீவன் மீது குற்றச்சாட்டு

Johari Seman     12:45:00 PM    
கோலாலம்பூர், ஏப்ரல் 21: இவ்வாண்டு தொடக்கத்தில் முகநூலில் போலீசாருக்கு எதிராக அவதூறு கூறியதாக மைவாட்ச் அமைப்பின் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் மீது நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 3.1.2017ஆம் தேதி காலை 8.30 மணியளவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் 11ஆவது மாடியில் மைவாட்ச் முகநூலில் இக்குற்றத்தைப் புரிந்ததாக சஞ்சீவன் (வயது 32) மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஈராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகைச்செய்யும் குற்றவியல் சட்டம் 500ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவரை 5 ஆயிரம் வெள்ளி தனிநபர் ஜாமினில் மட்டுமே விடுவிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சய்புல் ஹஸ்மி முகமட் சாஆட் நீதிமன்றத்தில் கூறினார்.

தனது கட்சிக்காரர் மீது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால் அவருக்கான ஜாமின் தொகையை மேலும் குறைக்க வேண்டும். காரணம் அவர் நீதிமன்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்று சஞ்சீவன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பிரகாஷ் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜகராமல் இருப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. அவர் இதுவரை நீதிமன்றத்தில் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என்ற அவர், அவருக்கான ஜாமின் தொகையை 2 ஆயிரம் வெள்ளியாக குறைக்க வேண்டும் என்றார்.

எனினும், சஞ்சீவனை 3 ஆயிரம் ஜாமினில் விடுவிப்பதாகக் கூறிய மாஜிஸ்திரேட் மாயுடின் முகமட் சோம், இவ்வழக்கு வரும் மே 26ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்றார்.

தமது முகநூலில் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரைத் தாக்கி எழுதியதாக கடந்த 27.10.2016ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

போலி கல்வி சான்றிதழை வைத்திருந்ததாக கடந்த 25.8.2016ஆம் தேதி அவர் மீது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நிதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஆடவர் ஒருவரிடமிருந்து பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த 16.8.2016ஆம் தேதி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆடவர் ஒருவருக்கு மிரட்டல் கொடுத்ததாக கடந்த 12.8.2016ஆம் தேதி பகாங், தெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும், மிரட்டி பணம் பறித்ததாகம் கடந்த 19.7.2016ஆம் தேதி அவர் மீது சிரம்பானிலுள்ள மாஜிஸ்திரேட் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. –தி மலேசியன் டைம்ஸ்

ஸாஹிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து மஇகா பிரதமரிடம் அதிருப்தியை தெரிவிக்குமா? குலசேகரன் கேள்வி

Johari Seman     12:00:00 PM    

கோலாலம்பூர், ஏப்ரல் 21: இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு ஓடிவந்துள்ள சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸாஹிர் நாயக்கிற்கு அரசாங்கம் நிரந்தர வசிப்பிட
அந்தஸ்து வழங்கியுள்ளது குறித்து மஇகா பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் தனது அதிருப்தியை தெரிவிக்குமா என்று ஜனநாயக செயல் கட்சியின் உதவித் தலைவர் எம்.குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

நேற்று தலைநகரில் நடைபெற்ற 2050ஆம் ஆண்டு வரைக்குமான தேசிய உருமாற்றத் திட்டம் மீதான கலந்துரையாடலில் கலந்து கொண்ட மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், நிரந்திர வசிப்பிட அந்தஸ்தைப் பெற்றுள்ள ஸாஹிர் நாயக்கிற்கு மலேசியாவில் இடமில்லை என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் இந்நாட்டில் இஸ்லாத்தின் மேம்பாட்டிற்கு எந்த வகையிலும் உதவியாக இருக்க மாட்டார் எனவும் அவர் கூறியிருந்தார்.

அவர் அவ்வாறு கூறியிருந்ததில் எனக்கு கொஞ்சம்கூட திருப்தி இல்லை. காரணம் அவருக்கு நிரந்திர வசிப்பிட அந்தஸ்து கொடுத்த அரசாங்கத்திற்கு எதிராக மஇகா என்ன செய்யப் போகிறது என்பது குறித்து அவர் ஒன்றும் விளக்கவில்லை என்றார்.

இதற்கு எதிராக மஇகா என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறது என்றே மக்கள் குறிப்பாக இந்திய சமூகத்தினர் தெரிந்துக் கொள்ள விரும்புகின்றனர். மாறாக, அதுகுறித்து கருத்துரைப்பதை அல்ல என்று அவர் சொன்னார்.

ஸாஹிர் நாயக்கிற்கு வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் அல்லது அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஏன் டாக்டர் சுப்பிரமணியம் கேட்கவில்லை என்றும் குலசேகரன் வினவினார்.

நான் டாக்டர் சுப்பிரமணியத்திடம் 3 கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். முதலாவது, இந்நாட்டில் பல ஆயிரம் இந்தியர்கள் சிவப்பு நிற அடையாள அட்டையுடன் குடியுரிமைக்காகவும், நிரந்திர வசிப்பிட அந்தஸ்துக்காகவும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஸாஹிர் நாயக்கிற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அவ்வாறு அவருக்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து மஇகா பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடமும், உள்துறை அமைச்சிடமும் தனதுஅதிருப்தியைவெளிப்படுத்தியதா?

இவ்விவகாரத்தை டாக்டர் சுப்பிரமணியம் அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பி, ஸாஹிர் நாயக்கிற்கு வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை ரத்து செய்வாரா? என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

இந்தியா கறுப்புப் பண மாற்றும் நடவடிக்கையிலும், தீவிரவாத இயக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக இந்தியாவின் தேசிய விசாரணைப்பிரிவின் விசாரணைக்கு ஸாஹிர் நாயக் ஆளாகியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்துக் கடவுளை இழிவுப்படுத்தியதற்காகவும், இந்து மதத்தை தரக்குறைவாக பேசியதற்காகவும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி வந்தார்.

அல்காய்டா தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததற்காக பிரிட்டன், கனடாவிற்குள் நுழைவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சரவா மாநிலத்திற்குள் நுழைவதற்கும் ஸாஹிர் நாயக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. –தி மலேசியன் டைம்ஸ்

© 2018-2020 SELANGOR POST. . BEBAS DAN DIYAKINI .